கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. தற்போது, இந்தியாவில் 39 பேரும், சென்னையில் 2 பேரும் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதனால், தமிழக மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளிக்கையில்;- கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். சீனாவில் கொரோனா பரவியததில் இருந்தே தனி வார்டுகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். சீனா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பானில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

கொரோனா உள்ளவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவதை 100 சதவீதம் தடுத்து வருகிறோம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனா வைரஸ் எதிரொலியால் எல்லோருக்கும் முகக் கவசம் அணியும் நிலை ஏற்படவில்லை. இருமல், காய்சல், மூச்சுத்திணறல் வந்த பிறகே கொரோனா பரவும் நிலை உள்ளது. இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். 

மருத்துவ விதிகள் காரணமாக நோயாளியின் குறித்த துல்லியத் தகவல்களை வெளியிட வில்லை. தமிழகம் முழுவதும் 300 படுக்கைகள் தயாராக உள்ளன, 10 லட்சம் முகக் கவசங்கள் தயாராக இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.