கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 120-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், கொரோனாவை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. 

அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் -ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், சினிமா திரையரங்குகள், இரவு நேர கிளப்புகள், நீச்சல்குளங்கள், அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கும் அடுத்த ஒருவாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும். அதேபோல், திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன். கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை மனம் உகந்து வரவேற்கிறேன் என்றார். மேலும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் WORK FROM HOME அளிக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு நடவடிக்கைகளை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் உறுப்பினர்களும் வரவேற்று பேசினார்கள். அதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வுக் காக பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இதை அனைவரும் சேர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.