தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் இருந்து தவறிவிட்டதாகவும் இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா ஆட்சி வென்றிருக்கிறது.அதிமுக ஆட்சி தோல்வியடைந்திருக்கிறது என்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர். சரவணன் நீண்ட அறிக்கையை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்றானது இந்தியாவிலும் அதனுடைய கோர தாண்டவத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்த போதிலும், தமிழக அரசினுடைய முறையான திட்டமிடாத செயல்பாடுகளினால் பெருந்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை ஏதும் அரசு தானாக எடுக்கவில்லை. பயனுள்ள திட்டங்களையும் ,செயல்பாடுங்களையும், தன்னுடைய மெத்தனபோக்கினால் கண்டு கொள்ளமால் இருந்துவிட்டு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் ,  உடல்நலத்தையும், உயிரையும் கேள்விகுறி ஆக்கியுள்ளது. 

தமிழக அரசானது ஊரடங்கை மட்டுமே ஒரு தீர்வாக எண்ணி ஐந்து முறை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆறாவது ஒரு ஊரடங்காக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  சென்னை மண்டலம் அதிக பாதிப்பு  உள்ள மண்டலமாக அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல்வேறு பணிகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று சென்னையை விட்டு வெளியேறி குறிப்பாக மதுரை போன்ற தென்மாவட்டங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இதை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையான பரிசோதனைகளும் உடனடியாக செய்யப்படவில்லை.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான உணவு, பராமரிப்பு, மருந்துகள், மருத்துவ ஆலோசனைகள், மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அரசு மருத்துவமனைகளின் மேல் மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டனர். மேலும் தொற்று வந்தவர்களை மிதமான பாதிப்பு முதல் அதிக பாதிப்பு வந்தவர்கள் என்று வேறு படுத்தினாலும் அதற்குறிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. தொற்று பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களை தனியார் கல்லூரிகளில் முறையான கவனிப்பு இன்றி ஏனோ தானோ என்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 எனது தொகுதிக்குட்பட்ட தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் தங்கி இருந்த மதுரை பழங்காநத்ததைச் சேர்ந்த தனிக்கொடி என்ற 60 வயது முதியவர் மன உளைச்சலால் நம்பிக்கையினை இழந்து மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சரியான சிகிச்சைகள், உணவு, இருப்பிடம் வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகள் நடைபெறுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தப்பியோடிய நபர் கூவம் ஆற்றில் இறந்து கிடந்தது அனைவரும் அறிந்ததே. காஞ்சிபுரத்தில் மனைவியின் பிரசவத்திற்கு வருவதற்கு இ-பாஸ் கிடைக்காததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற தற்கொலைகளை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை.

நிர்வாகம் சரியாக நடப்பது போன்று தினமும் ஒரு போலியான மருத்துவ அறிக்கையை தமிழக அரசு வெளியிடுகிறது. ஆனால் இது போன்ற தற்கொலைகள் அதில் எங்காவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதா?. உயிரிழப்பு கணக்கில் இந்த அரசிடம்  வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்கு இதுவே சான்று.  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை உடனே அப்புறப்படுத்தாமல் நோயாளிகள் தங்கி இருக்கும் அறையிலேயே வைத்திருந்ததால் பிற நோயாளிகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் "செவிடன் காதில் ஊதிய சங்கு" போல எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

தமிழக அரசின் முறையற்ற திட்டமிடல், செயல்பாடுகள், அறிவிப்புகள், நாளுக்கொரு அணுகுமுறை என்று அனைத்துமே மக்களை குழப்பத்திலும் , துன்பத்திலும் , மன உளைச்சல் அளிப்பதாகவே இருக்கிறது. அரசின் இந்த செயல்கள் அனைத்தையும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எதிர்கட்சிகள் சொல்லும் நல்ல ஆலோசனைகளை கேட்க கூடாது என்ற கொடூர எண்ணம். இதையும் தாண்டி, அரசியல் மிரட்டல்கள் வேறு.மொத்தத்தில் மதுரையைப் பொருத்தவரையில் அரசின் மெத்தனப்போக்கால் மக்கள் அவதிபடுகின்றார்கள்.இந்த வார நிலவரப்படி கொரோனாவே வெற்றியடைந்துள்ளது. அரசு நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது.

தமிழக அரசு இனியும் ஊரடங்கை மட்டும் நம்பி இருக்காமல் ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து, காலம் தாழ்த்தாமல் அதிக பரிசோதனைகள் எடுத்து நோய்தொற்றினையும், உயிர் பலியினையும் குறைக்குமாறும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் முறையான மனநல ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுகொள்கிறேன்.