கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி;-  கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பிறகே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. ஜனவரி 23ம் தேதி முதல் விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது.  


கொரோனா தொற்றை தடுப்பதுதான் மிகவும் முக்கியம்; அதைத்தான் அரசு தீவிரமாக செய்து வருகிறது.  கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. புதிதாக 35,000 PCR கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன. கொரோனா பரிசோதனை நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. 

 
3 முறை மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,267ஆக உயர்ந்துள்ளது. 


தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14இல் இருந்து 15ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180ஆக அதிரித்துள்ளது. அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு.  இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.