இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக கிடைக்கும் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளரும்  மருத்துவருமான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக, சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழக அரசு சார்பில் சௌமியா சுவாமிநாதனுக்கு covid-19 சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதை அவருக்கு வழங்கினார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சௌமியா சாமிநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவில் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகளவில் 210 நாட்களுக்கும் மேல் பரவியுள்ள இந்த வைரஸ், பெறும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.62 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு  அடைந்தவர்களின் எண்ணிக்கை 2.13 கோடியை கடந்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸில் சிக்கி குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை 1.41 கோடியை தாண்டியுள்ளது. இதில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 24 லட்சத்து 61 ஆயிரத்து 599 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த  24 மணிநேரத்தில் சுமார் 64 ஆயிரத்து 553 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 48 ஆயிரத்து 40 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இப்படி இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசியால் மட்டுமே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என உலக நாடுகள் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இந்நிலையில் அதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவும் தடுப்பூசி ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் இருந்து வருவதாகவும், விரைவில் அது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் சுதந்திர தின விழாவான இன்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செயின் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பின்னர் பொது மக்களுக்கு உரையாற்றினார். 

 

அப்போது பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு அவர் விருது வழங்கி கவுரவித்தார். குறிப்பாக கொரோனா  வைரஸ் தடுப்பு களத்தில் சிறப்பாக பணியாற்றிய  26 பேருக்கு அவர்  சிறப்புப் பதக்கங்கள்  வழங்கி கவுரவித்தார்.  மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டது. கொரோனா நெருக்கடியிலும், தங்குதடையின்றி மருந்துகள் கிடைக்க செய்த மருத்துவ சேவை கழகத்திற்கு நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. அதேபோல் கொரோனா நோய்த் தொற்று சங்கிலியை உடைத்த சென்னை மாநகராட்சிக்கு நல ஆளுமை விருது வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியின்  உச்சாணியாக உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக  செயல்பட்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்தவரும் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார். அவருக்கு covid-19 சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

விருதை பெற்றுக்கொண்ட சௌமியா சுவாமிநாதன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலக அளவில் கொரோனா  பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள், மருத்துவ பரிசோதனையில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவிலும் மூன்று விதமான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்படுத்தி இலவசமாக கிடைக்கும் என சௌமியா கூறினார்.