ராஜ்பவனில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.  

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும். ராஜ் பவன் கட்டிடத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்தனர். இந்த நபர்கள் யாரும் ஆளுநர் அல்லது ராஜ் பவனின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நேரடி தொடர்பில் இருந்த உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 88 பேர் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்வாரிலால் புரோஹித் தன்னை 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்டுள்ளார் என ஆளுனர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.