கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா விதிகளை மீறினால் 6 மாத சிறை தண்டனையோ, ரூ.1,000 அபராதமோ, அல்லது இவ்விரண்டுமோ விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 4  பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மராட்டியத்தில் அதிகபட்சமாக  52 பேரும், கேரளாவில் 40 பேரும் பாதிக்க்பட்டு உள்ளனர்.  22 மாநிலங்களில் அசுர வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒரு பகுதியாக, நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளும் விதமாக 'மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு' கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு கடுமையாக்கி வருகிறது.

குறிப்பாக, தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனையோ, ரூ.1,000 அபராதமோ, அல்லது இவ்விரண்டுமோ விதிக்கப்படலாம். தொற்று நோய்கள் சட்டத்தின் பிரிவு 10 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 10 ன் படி இத்தண்டனை விதிக்கப்படும். மக்கள் வீட்டு தனிமைப்படுத்தலை உடைத்து நோய் பரவாமல் இருக்க, கடுமையான சட்ட விதிகளை பின்பற்றுவதற்கான உரிமைகளை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளோம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.