தமாகா விவசாய பிரிவு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் புலி யூரைச் சேர்ந்தவர் ஏ.நாகராஜன்(65). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவராக உள்ளார்.  இவர் கடந்த 26ம் தேதி திருச்சி மாவட்ட அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வருடன் கலந்து கொண்ட விவசாயிகள் 12 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில், கடந்த 30ம் தேதி திடீரென சளி, காய்ச்சல் காரண மாக சில நாட்களுக்கு முன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், பின்னர் நேற்று முன்தினம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பிற்பகல் நாகராஜன் உயிரிழந்தார். நாகராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது அரசு மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டது.

இதனால், அவருடன் கலந்து கொண்ட மற்ற விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். புலியூர் நாகராஜன் மறைவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு நிர்வாகி உயிரிழந்துள்ளார்.