நடிகை வனிதாவின் புகாரில் கைதான சூர்யா தேவி மற்றும் அவரை கைது செய்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்  ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த காவல் நிலையமே அதிர்ந்து போய் இருக்கிறது.

நடிகை வனிதா கடந்த ஜூன் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. வனிதாவின் திருமணத்தை சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தை சேர்ந்த சூர்யா தேவி (27) என்ற பெண் விமர்சித்து தனது ‘யு-டியூப்' சேனலில் வெளியிட்டார்.

இதையடுத்து, போரூர் காவல் நிலையத்தில், சூர்யா தேவி மீது வனிதா புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா தேவி, வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16-ம்தேதி வனிதா மீது புகார் அளித்தார். இருவருமே மாற்றி மாற்றி புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், போலீஸார் கடந்த 23-ம் தேதி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கைது நடவடிக்கையின் விதிமுறைப்படி சூர்யா தேவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், வடபழனி மகளிர் காவல் நிலைய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். தற்போது சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில், சூர்யா தேவி மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா தேவி கைது செய்யப்படும் போது காவல் நிலையத்தில் உடன் இருந்த, நடிகை வனிதா மற்றும் காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் தான் தலைமறைவாகவில்லை என்றும், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அப்படி இருந்தால், தான் குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சூர்யா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.