சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் அரை மணி நேரம் நின்று செல்வதால் நோய்த்தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொண்டு இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதிவிலக்கு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே சென்னையில் இருந்து தென் தமிழகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் வாகனங்களில் சென்று கொண்டு இருக்கின்றார்கள். இந்தநிலையில் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இதனால் குறைந்தது அரைமணி நேரத்திலிருந்து ஒருமணி நேரம் வரை ஒவ்வொரு வாகனமும் நின்று கொண்டு இருப்பதால் நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. ஆகவே இன்று ஒரு நாள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க விலக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற முறையீட்டை முன்வைத்தார். இதற்க்கு நீதிபதிகள் தற்போதைய சூழ்நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு பரிசீலிக்கலாமே ? என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தென் மாவட்டம் விரையும் மக்களுக்கு ஒரு நற்செய்தியாக உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மற்ற சுங்கச்சாவடிகளிலும் இன்னும் சற்று நேரத்தில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.