உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரோனா அச்சம் காரணமாக நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, ஜூன் 8 முதல் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் மார்ச் 26 முதல் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டன. அவசர வழக்குகள் வீடியோ கான்பரஸ் வசதியில் விசாரிக்கப்பட்டன. நீதிபதிகள் நீதிமன்றத்தில் உள்ள தங்களது அறைகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வசதியில் வழக்குகளை விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்தனர்.


இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறாத நிலையில் நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணையை தொடரவும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரடி விசாரணை மற்றும் நேரடியாக வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்கவும் முடிவானது. அதன்படி ஜூன் 1 முதல் உயர் நீதிமன்ற கிளையில் நேரடி விசாரணை தொடங்கியது. நேரடியாக வழக்குகளை தாக்கல் செய்வதும் தொடங்கியது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சிலர் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அறைகளில் நடைபெற்று வந்த வீடியோ கான்பரன்ஸ் விசாரணையும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த நேரடி விசாரணை மற்றும் நேரடி மனுத்தாக்கலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 8 முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நீதிபதிகள் அவர்களின் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வசதியில் வழக்குகளை விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர மனுக்களை மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 8 முதல் ஜூலை 3 வரை உயர் நீதிமன்ற கிளையில் வீடியோ கான்பரன்சில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியலும், அவர்கள் விசாரிக்கவுள்ள வழக்குகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.