கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லையென்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்.

 சென்னையில் நாள்பட்ட பிற நோய்களால் நிகழ்ந்த 444 மரணங்கள் பின்னர் அவர்களுக்கு நோய் தொற்று  கண்டறியப்பட்டது. அதன்பின்பு அந்த மரணங்கள் கோவிட்19 மரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.கொரோனா நோயாளிகள் முழு மன திருப்தியோடு கோவிட் கேர் சென்டர்களில் சிகிச்சை பெறுகின்றனர். மதுரையில் காய்ச்சல் கண்டறியும் குழுக்கள் மூலம் 1லட்சத்து 69ஆயிரத்து 468 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பெறப்பட்டுள்ளது. மதுரையை பொறுத்தவரை நோய் கட்டுக்குள் உள்ளது. எண்ணிக்கையை கண்டு பயப்பட வேண்டியதில்லை. காய்ச்சல் பரிசோதனை கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை. பிளாஸ்மா வங்கி அமைக்க பல மாவட்டத்தில் கோரிக்கை உள்ள நிலையில், நம் மாவட்டத்தில் மட்டுமே அதிகமானோர் பிளாஸ்மா தானம் தர முன்வந்துள்ளனர்.

 மதுரையில் மக்கள் ஒத்துழைப்பில் நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் கொடுத்துள்ளது. அதன்படி 444 மரணங்கள் குறித்து மருத்துவக்குழு ஆய்வு செய்து நாள்பட்ட பிற நோய்களால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்த நோயாளிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அதன்பின்பு அந்த மரணங்களை கோவிட்19 மரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தை மறைக்க வேண்டிய அவசியம், கட்டாயம் எங்களுக்கு இல்லை. இதற்கு மருத்துவமனை, சுடுகாடு உள்ளிட்ட இடங்களில் ரிக்கார்டும் உள்ளது. மரணத்திற்கு ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் போது மரணத்தை எவ்வாறு மறைக்க முடியும். மக்கள் மத்தியில் அச்சத்தை பதட்டத்தை பீதியை ஏற்படுத்த  எதிர்கட்சிகள் முயற்சிக்கிறது.  எங்கள் வேலையை சரியாக செய்து கொண்டுள்ளோம். எதிர்க்கட்சிகள் அவர்கள் வேலையை செய்கிறார்கள்.