இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இன்று (08.04.2021) பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆலோசனை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்திலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் முகாம்கள் நடத்த மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.