திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு கொரோனா உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய்க்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் திமுக எம்எல்ஏ ஜெ..அன்பழகன் உள்ளிட்ட சிலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில், வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு. இவர் கடந்த 3 முறை திமுக நகர செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, உயிரிழந்த நகர செயலாளர் கோட்டை பாபு அவர்களின் வீடு மற்றும் தெரு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.