கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனியின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த கே. பழனி உள்ளார். இவர் ஊரடங்கு தொடங்கியது முதல் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது வருகிறது. 

இந்நிலையில், எம்எல்ஏ பழனியின் உடல்நிலை குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதுதொடர்பாக, இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்;- தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி, கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு, 12-ம் தேதி இரவு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன், அவரது மகன்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்ததுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம், கே.பழனிக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அறிவுறுத்தினார்.

நேற்று அவரது மகன் பி. செல்வத்திடம் அவரது தந்தையின் உடல் நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். இன்று காலை கே.பழனியின் மற்றொரு மகன் பி. வினோதத்திடம் அவரது தந்தையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், இன்று காலை 10 மணியளவில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனியிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரிடம், உடல்நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும், வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது கே.பழனி தான் நலமாக இருப்பதாக தெரிவித்ததுடன், முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.