தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் மட்டுமே அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,75,678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கை 2,551ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்த போதிலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி கடந்த 19ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 1,245 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 665 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அம்மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.