கூட்டுறவு சங்கங்களில் தொடர் முறைகேடு புகார் காரணமாக, அந்த சங்கங்களை கலைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அது குறித்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ரத்து செய்வதற்கான சட்ட முன் வடிவை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1,200 கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்தன என்பது புகார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 400 கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களுக்கு பூட்டு போட்டுக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டது. கூட்டுறவு சங்க தேர்தல்கள் எங்கு நடந்தது என்பதே யாருக்கும் தெரியாது என கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களையும் ரத்து செய்ய தற்போதைய திமுக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் தொடர் முறைகேடு புகார் காரணமாக, அந்த சங்கங்களை கலைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அது குறித்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இம்மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் தேர்வான நபர்களின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு வரை உள்ள நிலையில்,அதனை ரத்து செய்வதற்கான மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
