கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசின் இந்த நடவடிக்கைக்கு டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும்.

எனவே, இப்படியோர் உத்தரவு பிறப்பித்திருந்தால், பழனிசாமி அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.