கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போது  அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றி வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலை இழந்து, ஒருவேளை உணவு கூட கிடைக்காத சூழ்நிலையில் குடும்பம், குடும்பமாக பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் நடந்தே தங்களுடைய மாநிலத்திற்கு சென்றனர். இந்த முறை முன்னதாகவே அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் புலம் பெயரும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கொரோனா வைரஸ் தொற்று நோய் இரண்டாவது அலை பரவலைத் தொடர்ந்து, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொருட்டு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டமாகக் கூடுவதாகத் தெரிய வருகிறது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றிட உகந்த சூழ்நிலையை உருவாக்கவும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப செல்லாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் அவர்கள் தங்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்திட ஏதுவாகவும் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யவும், தொழிலாளர் துறையில் மாநிலக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மேற்படி கட்டுப்பாட்டு அறைக்கு கீழ்காணும் அவசர உதவி எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு 044-24321438, 044-24321408 தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

எனவே, தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் எந்தவித அச்சமோ, பதட்டமோ அடையாமல் தங்கள் பணியிடங்களில் தொடர்ந்து பணிபுரியுமாறும், அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் போதுமேற்கண்ட மாநிலக் கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தகுந்த நிவாரணம் பெற ஆலோசனையும் வழிகாட்டுதல்களும் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களால் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மாவட்ட அளவிலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் கீழ்க்கண்ட 9 மாவட்டங்களில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு அதன் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய பிறத் துறைகளுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.