தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் புதிய ஆப் ஒன்றை உருவாக்குவது தொடர்பான கான்ட்ராக்டை வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கு கொடுத்துள்ளதாக வெளியான தகவல் அதிமுக ஐடி விங்க் பெருந்தலைகளை டென்சன் ஆக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக – அதிமுக ஆட்சிகள் தான் நடைபெற்று வருகின்றன. 1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு கட்சியினரும் அதற்கு முன்பு இருந்ததை விட பரம விரோதிகளாக தங்களைத் தாங்களே கருதிக் கொள்ள ஆரம்பித்தனர். ஒரு கட்சிக்காரர் குடும்ப திருமண விழா உள்ளிட்ட சுபகாரியங்களில் கூட மற்றொரு கட்சிக்காரர் செல்ல முடியாத நிலை இருந்தது. அதிலும் அதிமுக பிரமுகர்கள் திமுக பிரமுகர்களிடம் இருந்து 16 அடி தள்ளியே நிற்க வேண்டும். அதிமுக பிரமுகர்கள், திமுகவினரிடம் பேசினார்கள் என்று தெரிந்தாலே உடனடியாக பதவி பறிக்கப்படும்.

இதே போல் அதிமுக ஆட்சியில் இருந்தால் அனைத்துவிதமான ஒப்பந்தங்களும்  திமுக கட்சிக்காரர்கள் மற்றும் அக்கட்சி தொடர்பில்லாதவர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். தப்பித் தவறி ஒப்பந்தம் திமுக தொடர்புடையவருக்கு சென்றது தெரிந்தால் அந்த துறையின் அமைச்சர் பதவி கூட உடனடியாக பறிக்கப்படும். இந்த அளவிற்கு திமுக வெறுப்பில் உறுதியாக இருந்தார் ஜெயலலிதா. சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை கடுமையாக விமர்சித்து பேசினால் உடனடியாக அமைச்சர் பதவி தேடி வரும். அதே சமயம் திமுகவினருடன் தொழில் ரீதியிலான தொடர்பு இருந்தால் கூட அதிமுகவில் கட்டங்கட்டப்படுவார்கள்.

அதிமுகவை பொறுத்தவரை அந்த கட்சி பிரமுகர்கள் திமுகவினருடன் தொடர்பில் இருக்கிறார் என்று ஆதாரத்துடன் கார்டனுக்கு ஒரு கடிதம் எழுதினால் போதும் மறுநாளே நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவும் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு தொடர்பான கான்ட்ராக்டுகள் திமுக மற்றும் திமுக தொடர்புடையவர்களுக்கே செல்வது போல் பார்த்துக் கொள்ளப்படும். அதிமுக அளவிற்கு கண்டிப்புடன் இல்லை என்றாலும் கான்ட்ராக்டுகள் திமுக ஆட்சியில் திமுக தொடர்புடையவர்களுக்குத்தான் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த நிலையில் வெளிப்படையாக திமுக ஆதரவு நிலைப்பாடு உடையவர் வைரமுத்து.

மத்திய மற்றும் மாநிலஅரசுகளுக்கு எதிராக அவ்வப்போது வெளிப்படையாக கருத்து பதிவிடுபவர். அதிலும் கோரிக்கையை முன்வைப்பது போல அதிமுக அரசுக்கு எதிராக ட்விட்டரில் தகவல்களை வெளியிடுபவர். மேலும் திமுகவிற்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிடுவது வைரமுத்து வழக்கம். கலைஞர் இருந்தது முதலே திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் வைரமுத்து அந்த கட்சியில் இல்லையே தவிர அவரும் ஒரு திமுக காரர் தான் என்று கூறப்படுவது உண்டு. அந்த அளவிற்கு திமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் வைரமுத்து.

வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி. இவர் தகவல் தொழில்நுட்பங்களில் தமிழ் மொழியை மேம்படுத்துவதில் சிறந்த அனுபவம் கொண்டவர். அது தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருபவர். தமிழை தகவல் தொழில்நுட்பத்தில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் புராஜக்ட்டுகளையும் செய்து வருபவர். இந்த நிலையில்தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் புதிதாக ஒரு ஆப் டெவலப் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான கான்ட்ராக்டை தான் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியின் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்களில் திமுக அனுதாபி வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கியின் நிறுவனத்திற்குதமிழ் வளர்ச்சித்துறையின் கான்ட்ராக்ட் சென்று இருப்பது எப்படி? என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏன் நம் ஐடி விங்கில் ஆப் டெவலப் செய்யும் அளவிற்கு ஆட்கள் இல்லை என்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பொறுமி வருகின்றனர். கான்ட்ராக்ட் எப்படி முடிவு செய்யப்பட்டது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனை குறி வைத்து சிலர் காய் நகர்த்துவதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் வெளிப்படையாக நடைபெற்ற டெண்டரில் கலந்து கொண்டு மதன் கார்க்கி நியாயமான முறையில் டெண்டரை பெற்றுள்ளார், இதில் அமைச்சர் எப்படி தலையிட முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே சமயம் கனிமொழிக்கு நெருக்கமான பாதிரியார் ஜெகத் கஸ்பாரின் அமைப்பு ஒன்றில் பாண்டியராஜனின் மனைவியும் உறுப்பினராக இருப்பதாக கூறி அமைச்சருக்கு எதிராக அதிமுகவில் ஒரு குரூப் அடுத்த ஆயுதத்தை எடுத்துள்ளதாம்.