தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக ஜனவரியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போதே, எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டார் கமல்ஹாசன். ‘நான் எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலை எம்.ஜி.ஆரை மையப்படுத்தி கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.
அதற்கேற்ப எம்.ஜி.ஆர். முதன் முறையாக 1967, 1971 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பரங்கிமலை தொகுதியில் போட்டியிடவும் கமல் முடிவு செய்துள்ளார். பழைய பரங்கிமலை தொகுதிதான்  தற்போது ஆலந்தூர் தொகுதியாக அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு எம்ஜிஆர் செண்டிமென்டில் உள்ள கமல்ஹாசன், தற்போது ஆலந்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திலிருந்து கமல்ஹாசன்  நாளை (மார்ச் 3) தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் முடிவு செய்திருக்கிறார். 
ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட மணப்பாக்கம் பகுதியில்தான் எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து கமல்ஹாசன் பிரசாரத்தைத் தொடங்குகிறார். கமல்ஹாசனின் எம்.ஜி.ஆர். செண்டிமென்ட் தேர்தலில் கைகொடுக்குமா என்பது மே 2-ல் தெரிந்துவிடும்.