மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 9ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. அப்போது விளக்கமளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழகத்தின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்திற்கான நீர் கண்டிப்பாக கிடைக்கும். 

உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி வாரியத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல. காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வரும் 9ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. 

தமிழகத்திற்கான காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே நம்பிக்கையை விதைத்துள்ளது.