ஓபிஎஸ் செம்ம ஜால்ரா..!ஏறி அடித்த புகழேந்தி.. வேடிக்கை பார்த்த ஓ.ராஜா..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சென்னையில் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் அதிமுகவை மீட்க மிகப்பெரிய அளவிலான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அதிமுக தலைமை மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அதிமுக-அமமுக இணைப்பு தொடர்பாகவோ, அதிமுக தலைமை தொடர்பாக யாராவது விமர்சித்தால் உடனடியாக கட்சியை விட்டு நீக்கும் நடவடிக்கையில் அதிமுக தலைமை ஈடுபட்டு வருகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் வாய் மூடி அமைதியாக இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா மற்றும் அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் ஆலோசனை நடத்தினர். அப்போது சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்துள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் புகழேந்தி அதிமுகவில் இருந்து தங்களை காரணம் இல்லாமல் நீக்கப்பட்டதாக தெரிவித்தார். எனவே எதிர்காலத்தில் அதிமுகவை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசித்ததாக கூறினார். மேலும் அதிமுகவில் இருந்து தங்களை போல் ஏராளமானோர் நீக்கப்பட்ட நிலையில் அனைவரையும் ஒருங்கிணைப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதிமுகவை மீட்பதற்காக மிகப்பெரிய அளவிலான மாநாடு விரைவில் நடத்தவுள்ளதாக தெரிவித்தவர், அதிமுகவை அழித்து வரும் இபிஎஸ்-ஓபிஎஸ் எதிராக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அப்போது கூறினார். ஈபிஎஸ் சொல்வதை கேட்டுக் கொண்டு ஓபிஎஸ் ஜால்ரா தட்டி வருவதாக தெரிவித்தவர், ஓபிஎஸ்-யிடம் நல்ல மனமும் இல்லை குணமும் இல்லையென்று தெரிவித்தவர், ஓபிஎஸ்-ஐ திட்டியும் பயனில்லை, குறை சொல்லியும் பயனில்லை, நேரம்தான் வேஸ்ட் என கூறினார். இபிஎஸ் தான் அனைத்தையும் செயல்படுத்துவதாக தெரிவித்தவர், ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு பேரும் இணைந்து நாடகமாடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
எனவே அதிமுகவை மீட்க அடுத்த கட்டமாக சட்டரீதியாக என்ன செய்யவேண்டும் எப்படி ஒன்றிணைய வேண்டும் போன்றவை ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறியவர், அதிமுக-வை காப்பதற்கு எல்லோரும் ஒன்று திரண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே அதிமுக- அமமுக இரண்டு பிளவாக உள்ள நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் 3 வது அணியை உருவாக்கியுள்ளனர், இதனால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் இந்த அணியோடு இணைந்து செயல்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.