இந்தியா கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு தாவிய கட்சி.. இபிஎஸ்யை சந்தித்து ஆலோசித்த தேசிய தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு இடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, ராமநாதபுரம் அல்லது தேனி தொகுதியை ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எடப்பாடியை சந்தித்த பார்வர்டு பிளாக் தலைவர்கள்
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை தீவிரப்பட்டுத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்யவில்லை. பாமகவின் முடிவிற்காக காத்துள்ளது. இந்தநிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய பார்வர்டு பிளாக் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சந்தித்து பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்து பேசினார். இந்தநிலையில், இன்று தேசிய தலைவர் நரேன் சட்டர்ஜி, - தேசிய பொதுச் செயலாளர் G. தேவராஜன் மற்றும் - தேசிய துணைத் தலைவர் மற்றும் தமிழக பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் ஆகியோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
அதிமுகவுடன் கூட்டணி
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் வழிநடத்தப்பட்டது. மதவாதத்துக்கு பாசிசத்திற்கு எதிராக பாஜகவுக்கு எதிராக செயலாற்றி வருகிறோம். அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம். இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட விருப்பத்தை தெரிவித்தோம். தொடர்ந்து அதிமுக தொகுதி பங்கிட்டு குழுவையும் சந்தித்து பேசி உள்ளோம் என கூறினார்.
தேனி அல்லது ராமநாதபுரம் தொகுதி
இதனை தொடர்ந்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் கதிரவன் பேசும்போது, தேனி அல்லது ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டு பேசி உள்ளோம்.அதிமுக கூட்டணி இந்த முறை வெற்றி கூட்டணியாக இருக்கும். தென் மாவட்டங்களில் உள்ள 60 தொகுதிகளில் எங்கள் வலிமையை காட்டுவோம்.திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை ஈடுபடுபவர்கள் மீது கட்சி சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்