அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று  தொடங்கியது. தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவ படிப்பு இடங்கள் 3,650 இதில் மாநில அரசின் கோட்டா 3,032 ஆகும். இந்த இடங்களுக்கான விண்ணப்ப பதிவானது கடந்த நவம். 03 முதல் 12 வரை இணையதளம் வாயிலாக நடைபெற்றது.  இதில் மொத்தம் 24,712 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 23,707 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு பிரிவு வாரியாக கலந்தாய்வானது அறிவிக்கப்பபட்டது. அதன்படி முதற்கட்டமாக அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான தமிழக அரசின் 7.5% சிறப்பு உள் இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு இன்று முதல் 20ஆம் தேதிவரை கலந்தாய்வு நடைபெறுகிறது. 

சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு 21ஆம் தேதி முதல் கலந்தாய்வு துவங்குகிறது. 7.5% உள் இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 313 பேருக்கும், பிடிஎஸ் படிப்புக்கு 92 பேருக்கும் என மொத்தம் 405 சீட் கிடைக்கும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு பல்வேறு கொரோனா தடுப்பு வழிமுறைகளை அரசு மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் மேற்கொண்டுள்ளது. அரங்கிற்குள்ளேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அடையாள அட்டையுடன் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் கலந்து கண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடிய 7.5% சிறப்பு திட்டம் கலந்தாய்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் இன்று மதியம் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்குகிறார். இன்று 267 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். கலந்தாய்வில் .001 % எந்த சந்தேகங்களுக்கும் இடமளிக்க கூடாது என்பதற்காக வெளிப்படைத் தன்மையுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பிடச்சான்று குளறுபடிகளை தவிர்க்க இங்கேயே நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது", என்றார்.