பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால் 30 கோடி ரூபாயும், அமைச்சர் பதவியும் தருவதாக கூறியதாக, கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படியொரு பரபரப்பு குற்றச்சாட்டை கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.

கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கர். இவர், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயன்று வருகிறது.

இது தொடர்பாக, பாஜகவினர் பலர் என்னை தொடர்பு கொண்டு, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தால் ரூ.30 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறியிருந்தனர். அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்தேன். அப்போது பாஜகவினர் பேசியதை மொபைலில் பதிவு செய்து, அதை காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் காட்டினேன். 

மேலும், எந்த சூழலிலும் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக மாட்டேன். இவ்வாறு கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கர் கூறியுள்ளார்.