கோவாவில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 13 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 21 இடங்கள் அக்கட்சியிடம் இல்லை.

இதற்கிடையில், 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு ஆதரவளித்ததையடுத்து, கோவாவில் பாஜக ஆட்சியை பிடித்தது. மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதற்கிடையில், பாஜகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினரான பிரான்சிஸ் டி சோசா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 14-2-2019 அன்று காலமானார். இதனால், ஆளும்கட்சியான பாஜக சட்டசபையில் தற்போது ஒரு உறுப்பினரை இழந்துள்ளது. இதுதவிர 2 இடங்கள் ஏற்கனவே காலியாக உள்ளது.

இந்நிலையில், ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என கோவா கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரகாந்த் கவர்னருக்கு எழுதி உள்ள கடிதத்தில், மாநிலத்தில் தற்போது உள்ள பாஜக அரசை கலைத்து விட்டு தனிப்பெரும்பான்மையாக உள்ள தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.   மேலும் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த எடுக்கப்படும் முயற்சி சட்டவிரோதமானது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.