திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் , அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ம்தேதி இடைதேர்தல் நடைபெற உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இந்த வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையடுத்து, அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

3 தொகுதிகளில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, உள்ளிட்ட 24 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

இதேபோல், தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பணியாற்ற உள்ளது. இதற்காக 3 தொகுதிகளிலும் தனித்தனி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவும்,

திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் 13 பேர் கொண்ட குழுவும்,

தஞ்சை தொகுதியில் முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.