ப.சிதம்பரம் மீது இன்னும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தாக்க அவருக்கு ஏதேனும் அழுத்தம் உள்ளதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்த கருத்துக்கள் பல காங்கிரஸ் தலைவர்களை கோபப்படுத்தியுள்ளன. ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி, "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் சரியா? தவறா? என்பது வேறு விஷயம். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியையும், இந்திரா காந்தியையும் ஏன் தாக்கி, அவர் தவறான நடவடிக்கை எடுத்ததாகக் கூற வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கசௌலியில் நடந்த ஒரு இலக்கிய விழாவில், கலந்து கொண்ட ப.சிதம்பரம், "நான் எந்த இராணுவ அதிகாரியையும் அவமதிக்கவில்லை. ஆனால், பொற்கோயிலை மீண்டும் கைப்பற்றுவதற்கான தவறான வழி இது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இராணுவத்தை வெளியே வைத்திருப்பதன் மூலம் அதை மீண்டும் கைப்பற்றுவதற்கான சரியான வழியை நாங்கள் காட்டினோம். ப்ளூ ஸ்டார் தவறான வழி, அந்த தவறுக்கு இந்திரா காந்தி தனது உயிரைக் கொடுத்தார் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி, ‘‘பாஜக மற்றும் பிரதமர் செய்யும் அதே காரியத்தையே தான் ப.சிதம்பரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் மீது ப.சிதம்பரம் மீண்டும் மீண்டும் தாக்கிப்பேசுவது பல சந்தேகங்களையும், அச்சங்களையும் எழுப்புவது துரதிர்ஷ்டவசமானது. ப.சிதம்பரம் மீது இன்னும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து தாக்க அவருக்கு ஏதேனும் அழுத்தம் உள்ளதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? ப்ளூ ஸ்டாருக்கு இந்திரா காந்தி தான் காரணம் என்றும், அதற்காக தனது உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்றும் இன்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

கடந்த 11 ஆண்டுகளாக பாஜகவின் குறைபாடுகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக ப.சிதம்பரம் ஏன் இதைச் செய்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. பாஜக முழு நாட்டையும் எவ்வாறு சீரழித்து வருகிறது என்பதை விளக்குவதற்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சியின் குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

1984 ம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை பஞ்சாபில் உள்ள பொற்கோயில் மீதான தவறான தாக்குதல் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். இந்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெரும் விலை கொடுத்தார்’’ என்றும் கூறி இருந்தார்.