தேர்தலுக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. 
இது குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீர ரெட்டி தெலங்கான முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிகட்சி தலைவர் சந்திரசேகர ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ராகுல் பிரதமராக ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.


அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீங்கள் ஆதரவு அளித்ததற்கு முதலில் நன்றி. சிறப்பு மாநில அந்தஸ்தை பாஜக நிராகரித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிரதமரானதும் ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்க முதல் கையெழுத்து போடுவேன் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். எனவே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியிடம் மட்டுமல்ல, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியிடமும் ரகுவீர ரெட்டி ஆதரவு கோரியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதியும் அதிக இடங்களைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறின. 
மத்தியில் பாஜக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், இக்கட்சிகள் ஆதரவளிக்கும் என்றும் கூறப்படுகின்றன. இந்நிலையில் ராகுல் பிரதமராக சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியிடம்  காங்கிரஸ் கட்சி ஆதரவு கோரியுள்ளது.