நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசு அமைவதைப் பார்க்கப் போகிறீர்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சில தினங்களுக்கு முன்பு  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தச் சமயத்தில்தான் கிழக்கு உத்தரப்பிரதேச பொறுப்பாளராக பிரியங்காவும் மேற்கு உத்தரபிரதேச பொறுப்பாளராக ஜோதிராதித்ய சிந்தியாவும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஏன் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள் என்பது பற்றி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

 “பிரியங்காவுக்கும் சிந்தியாவுக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஓர் இலக்கைக் கொடுத்திருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து இங்கே  நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த இலக்கு. குஜராத்தோ, உத்தரப்பிரதேசமோ, தமிழ்நாடோ அனைத்து இடங்களிலும் இதற்காக காங்கிரஸ் முழுசக்தியுடன் போராடும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த மாநிலங்களில் காங்கிரஸ் அரசை நீங்கள் பார்ப்பீர்கள். இதேபோல நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் எந்தப் பின்னடைவும் இல்லாமல் முழு சக்தியோடு போட்டியிடும்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிதான் பிரதான எதிர்க்கட்சி. எனவே அங்கே ராகுல் ஆசை நிறைவேற வாய்ப்பு உண்டு. ஆனால், உத்தரப்பிரதேசத்திலும் தமிழ் நாட்டிலும் அப்படி ஒரு நிலை இல்லை. எல்லா கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் செயல்திட்டமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தமிழ் நாட்டில் காங்கிரஸ் வேகமாக வாக்கு வங்கியை இழந்துவிட்டது. கடந்த 15 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்துதான் தேர்தலை காங்கிரஸ் சந்தித்துவருகிறது. திமுகவுடன் கூட்டணியில் நெருக்கமாக இருந்துகொண்டு ராகுல் காந்தி இப்படிப் பேசுவதை திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.