ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்து பேசினார்கள்.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சுமார் 15 நாட்களுக்கு மேல் சிபிஐ கஷ்டடியில் இருந்த ப.சிதம்பரம். கடந்த 20 நாட்களாக டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பலமுறை அணுகியும் சிபிஐ எதிர்ப்பால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.


கடந்த 19 அன்று சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனக்கு நாற்காலி, தலையணைகள் வழங்கவில்லை என்று ப.சிதம்பரம் புகார் கூறினார். தொடர்ந்து சிறையில் இருந்துவரும் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் பெறும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்களும் வழக்கறிஞர்களுமான கபில் சிபல், சிங்வி ஆகியோர் முயற்சி செய்துவருகிறார்கள்.
ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசவில்லை. ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது கண்டனம் தெரிவித்ததோடு அவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. இந்நிலையில் இன்று காலை திடீரென்று திஹார் சிறைச்சாலைக்கு சோனியா காந்தி வருகை தந்தார். சிறையில் அடைக்கபப்ட்டுள்ள ப.சிதம்பரத்தை சோனியா காந்தி சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடன் இருந்தார்.