புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனியாக நிற்கவும் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் திமுகவினர், அந்த அரசை விமர்சித்துவருகிறார்கள். உச்சகட்டமாக புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி என்றும் திமுக தலைமையில் ஆட்சி என்றும் அந்த மாநில திமுகவினர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி சென்ற திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், ‘புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைப்பேன். அப்படி இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.


ஏற்கனவே புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையே உள்ள கருத்து வேறுபாடு பேசி தீர்க்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் தனித்து போட்டியிடவும் காங்கிரஸ்  தயார் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, “கூட்டணிக்குள் எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், புதுச்சேரியில் நண்பர்களோடு இணக்கமான சூழ்நிலையை விரும்புகிறோம். அதேவேளையில் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.     
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படாவிட்டால், காங்கிரஸும் திமுகவும் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சி ஓட்டர் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்-அதிமுக-பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் - திமுக தனித்து போட்டியிடும்பட்சத்தில் அது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.