தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல் தலைவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை கூடுதலாக 8 தொகுதிகளை மட்டுமே பெற்றது. இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் கட்சி இழந்ததால் அக்கட்சி தலைமை விரக்தி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சி காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் அறிவித்தார்.

 
அந்த முடிவை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாமல், கூட்டணி கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள். ஆனாலும், ராகுல் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே  காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளையும் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு இரு செயல் தலைவர்களை நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு செயல் தலைவர்களில் ஒருவர் தென் மாநிலத்திலிருந்தும், வட மாநிலத்திலிருந்து ஒருவர் என இருவர் நியமிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சுஷில்குமார் ஷிண்டேவும் மல்லிகார்ஜுன கார்கேவும் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருக்கு பதில் 3 அல்லது 4 பேரை நியமிக்கும் திட்டமும் கட்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒரு முடிவை எடுத்தால்  இளம் தலைவர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இளம் தலைவர்களில் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக  காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸில் மூத்த தலைவர்களுக்கும் இளம் தலைவர்களுக்கும் ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில், இந்த முடிவை காங்கிரஸ் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேர்தலில் தீவிரமாகச் செயல்படாத மாநிலத் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பவும் ஆலோசிக்கப்பட்டு வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.