தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்று சிவங்கங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குடும்பத்தோடு வந்திருந்தார். அங்கே அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். “பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி தன்னுடைய அதிகார பலத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை அதை திமுக- காங்கிரஸ் கூட்டணி மக்கள் சக்தியோடு முறியடித்துள்ளது.
 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிகார பலம், பணப்பலம் இருந்தும் தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இதைப் பார்க்கும்போது, வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.


குடியுரிமைத் திருத்த சட்டம் மூலம் சிறுபான்மையின மக்களை பாஜக அரசு அச்சுறுத்தி வருகிகிறது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு. உலகத்திலேயே கோலம் போட்டதற்கெல்லாம் கைது செய்வதெல்லாம் பாஜக ஆட்சியில்தான் நடந்துள்ளது. இது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. புதுச்சேரியில் அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் நாள்தோறும் தலையிடுகிறார். நலத்திட்டங்களைத் தடுப்பதில் மத்திய அரசின் ஏஜென்டாக ஆளுநர் செயல்படுகிறார். அவரை மத்திய அரசு திரும்ப பெற்றால்தான் புதுச்சேரியில் நல்லாட்சி நடக்கும்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.