பாஜக நமது உரிமையைப் பறித்து உயர்சாதியினருக்கு வழங்கி நம்மை ஒழிக்கும் பணியை, அதுவும் நம்மை வைத்தே செய்யும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி  தெரிவித்துள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். சோனியா காந்தி எழுதிய கடிதத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, இதுதொடர்பாக பாஜக அரசை விமர்சித்தும் பதிவிட்டுள்ளார்.


அதில், “பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள்-  நாடார், வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், முதலியார், ரெட்டியார், செட்டியார், முத்தரையர், வண்ணார், நாவிதர் உள்ளிட்ட ஏராளமான சமூகங்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து , இந்த சமூகங்களிலிருந்து ஏறக்குறைய 3000 மருத்துவமாணவர்களின் இடங்களைப் பிடுங்கி ,அவர்கள் மருத்துவ கனவை மோடி அரசு சிதைத்துள்ளது.
ஆனால் உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்த மாபெரும் அநீதியை கடுமையாக கண்டித்து,காங்கிரஸ் கட்சியின் தலைவி அன்னை சோனியா காந்தி குரல் எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மட்டுமே தலித்துகள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பக்கம் நின்று சமூக நீதியைப் பாதுகாக்கும். பிஜேபி நமது உரிமையைப் பறித்து உயர்சாதியினருக்கு வழங்கி நம்மை ஒழிக்கும் பணியை, அதுவும் நம்மை வைத்தே செய்யும். நாம் விழிப்போடு இருக்க வேண்டிய நேரம் இது.” என்று அதில் தெரிவித்துள்ளார்.