காஷ்மீர் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் தலைமை கொறடா பதவியை ராஜினாமா செய்த புவனேஸ்வர் கலிதா இன்று பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த திங்களன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது உள்ளிட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிக்குமாறு காங்கிரஸ் தலைமை ராஜ்யசபா தலைமை கொறடாவான புவனேஸ்வர் கலிதாவை அறிவுறுத்தியது.

இதற்கு உடன்பட மறுத்த அவர், காஷ்மீர் விவகாரத்தில் தேசிய நலனுக்கு எதிராக கட்சியின் செயல்பாடு உள்ளதாலும், தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தேசிய எண்ணத்துக்கு மாறாக அழிவுப்பாதையில் காங்கிரஸ் பயணிக்கிறது, என்னால் அதற்கு உடன்பட முடியாது என்று கலிதா கூறியிருந்தார்.

அசாம் மாநிலத்தில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலிதா தனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடுவிடம் சமர்பித்த நிலையில் அவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டது. ஏப்ரல் 2020 வரை பதவிக்காலம் உள்ள நிலையில் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த கலிதா இன்று மாலை 5.30 மணியளவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புவனேஸ்வர் கலிதாவிற்கு முன்னதாக ராஜ்யசபா எம்.பி பதவியை சோனியா காந்திக்கு நெருக்கமானவராக திகழ்ந்த சஞ்சய் சிங் ராஜினாமா செய்தார்.