முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னவர் வந்த பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்தில் விலை பெரிய அளவில் மாறுபாடு இருப்பதாகவும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்குப் பதில் ரிலையன்ஸ் குரூப்பிடம் அதன் பராமரிப்பு பணிகள் விடப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டிவந்தார். கடந்த ஆண்டு தேர்தலின்போது இதை மிகப் பெரிய பிரசாரமாகவே ராகுல் செய்துவந்தார்.

 
இந்நிலையில் முதல் கட்டமாக பிரான்ஸிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களில் நேற்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. ரஃபேல் வருகைக்கு காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்தது. அதில், “ 2012ல் ரஃபேலை அடையாளம் கண்டது காங்கிரஸ்தான்.  காங்கிரஸ் அரசின் உழைப்பு இறுதியில் பலனை தந்திருக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தன. தற்போது பாஜக அரசு 36 ரஃபேல் விமானத்தை வாங்கியுள்ளது. இதுவே காங்கிரஸ் இருந்திருந்தால், 126 ரஃபேல் விமானங்களை வாங்கியிருக்கும். அதில் 108 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஃபேல் வருகைக்காக இந்திய விமானப்படையை ட்விட்டரில் பாராட்டியிருந்தார்  ராகுல் காந்தி. அதே வேளையில் ரஃபேல் குறித்து மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் விமர்சனம் செய்துள்ளார் ராகுல் காந்தி. 

 

 

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், “ரூ.576 கோடி மதிப்புள்ள ரஃபேல் விமானத்தை ஏன் தலா ரூ.1670 கோடிக்கு வாங்க வேண்டும்? 126 விமானங்களுக்கு பதில் ஏன் 36 விமானங்களை மட்டும் வாங்க வேண்டும்? ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு மாறாக திவாலாகி போன அனில் அம்பானிக்கு ஏன் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?” என  கேள்விகனைகளைத் தொடுத்துள்ளார் ராகுல் காந்தி.