இந்தியா-சீனா இடையே எல்லையில் என்ன நடக்கிறது என்பதை இந்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். எல்லை விவகாரத்தில் அரசு தொடர்ந்து மௌனமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் வழிவகுக்கிறது என அவர் கூறியுள்ளார்.  உலகமே கொரோனா வைரசை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் , இந்தியா சீனா,பாகிஸ்தான் என்ற எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காக்க போராடி வருகிறது. கடந்தாண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து,  பாகிஸ்தான் சீனா உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.

 மேலும், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வர உள்ளதால் , சீனா , இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.  அதன் வெளிப்பாடாக கடந்த மே 5 மற்றும் 6ஆம் தேதி இந்திய சீன எல்லையான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் இரு நாட்டு படை வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது . அதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து  சிக்கிம் எல்லைப்பகுதியான நகுலா பாஸில் இருதரப்பினரும் இரும்பி கம்பி தடிகளுடன் மோதிக் கொண்டனர்,  இந்த இரு சம்பவங்களையடுத்து மே 22ஆம் தேதி கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா  எல்லை தாண்டி விட்டதாக கூறி இந்தியாவை குற்றம்சாட்டிய சீனா அப்பகுதியில் ஏராளமான படைகளை குவித்து வருகிறது.  அதில்  கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளதாகவும், போருக்கு தயாராவது போல சீனா அங்கு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

இதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது படைகளை எல்லையை நோக்கி நகர்த்தி வருகிறது. அதில் ஏராளமான பீரங்கி துப்பாக்கிகளும் ராணுவ துருப்புகளும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியா-சீனா இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லையில் இந்தியா-சீனா இடையே  எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது,  நெருக்கடியான இந்த நேரத்தில் பல்வேறு சந்தேகங்களையும், யூகங்களையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது, எனவே  உண்மையில் எல்லையில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து மக்களுக்கு மறைக்காமல் சொல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.