திருநாவுக்கரசருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி பங்கீடு, எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது உள்ளிட்டவை முடிவு செய்யப்படும். 

தமிழகத்தில் இந்த மாதம் ராகுல் காந்தி இரண்டு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். ஒரு கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் பங்கேற்கிறார்” என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் பாமகவையோ, மக்கள் நீதி மய்யம்  அழைத்துவர திட்டம்  இருக்கிறதா என்ற கேள்விக்கு, “எங்களுடைய கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர விரும்புகின்றன. இதுதொடர்பாக திமுக தலைமையும் எங்களுடைய கட்சித் தலைமையும் கூடி முடிவெடுக்கும். எத்தனை பேர் மக்களவை உறுப்பினர்கள், எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை விட மத்திய அரசை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்காக வருத்தம் வரக்கூடிய அளவுக்கு கூட்டணி கட்சிகள் நடந்துகொள்ளாது” என்று பதிலளித்தார்.

காங்கிரஸ் சார்பில் யாருக்கு வாய்ப்புள்ளதோ அவர்கள் போட்டியிடுவர் என்று குறிப்பிட்ட அழகிரி, பாஜக-அதிமுக கூட்டணியே அல்ல, எனவே அதனைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதனை ஆணவத்தில் நான் சொல்லவில்லை. 

பாஜக கூட்டணியை தம்பிதுரை கடுமையாக எதிர்த்துவருகிறார். தமிழகத்திற்கு எதுவும் செய்யாத பாஜகவுடன் கூட்டணியா என்று நாங்கள் கேட்கவில்லை, அதிமுகவினரே கேட்கிறார்கள். எனவே அந்தக் கூட்டணி அமைந்தாலும் மேலெழும்பாது. எங்களுக்குப் போட்டி அதிமுகதான்” என்றும் தெரிவித்தார்.