கச்சா எண்ணெய் குறைந்தபோது  பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன்வராத மத்திய அரசு அதன் விலைகளை பன்மடங்கு உயர்த்தி மக்களை நசுக்கி வருகிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. உலகிலேயே பெட்ரோல் டீசல் மீதான  வாட்வரியை 69 சதவீதமாக உயர்த்தியது இந்தியாவாகத்தான் இருக்கும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 82 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த நிலையிலும், எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையில் (குறைக்கவில்லை) எந்த மாற்றமும் செய்யவில்லை.  கச்சா எண்ணெய் விலையை குறைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்க  வேண்டும், ஆனால் அப்படி செய்யாத எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகின்றன. அரசு எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களில் விலை அறிவிப்பின்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.57 பைசாவிலிருந்து 75.16 பைசாவகவும், டீசல் விலை லிட்டருக்கு 72.81 பைசாவிலிருந்து 73.39 பைசாவாகவும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 59 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 58 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது, 

வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் கூறுகையில், கடந்த 2014 மே மாதம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 106 டாலராகவும், நாட்டின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 71.40 பைசாவாகவும் இருந்தது, ஆனால் 106.85 டாலராக  இருந்த 1 பேரல் கச்சா எண்ணெய் கொரோனா முழு அடைப்பு காரணமாக கடந்த 82 நாட்களுக்கும் மேலாக வெறும் 38 டாலராக மட்டுமே இருந்துவருகிறது. ஆனால், இப்போதும் பெட்ரோல் விலை 75.61 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி தொடர் விலை உயர்வின் காரணமாக பெட்ரோலின் அடிப்படை விலையிலிருந்து 270 சதவீத வாரியாகவும், டீசலில் 256 சதவீத வாரியாகவும் மத்தியஅரசு வசூலிப்பதாக கேர் ரேட்டிங் அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. இப்படி எந்த கட்டுப்பாடும் இல்லாமல், மத்தியஅரசு தொடர்ந்து  விலையை உயர்த்தி வருவதன் காரணமாக மொத்த பாரமும் ஏழை எளிய மக்கள் மீது விழுந்துள்ளது. ஈவு இரக்கமின்றி அரசாங்கம் கருவூலத்தை நிரப்புகிறது. ஆனால் சுமையோ மக்கள் மீது விழுகிறது. இதன் காரணமாக மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்பதே தெளிவாக தெரிகிறது. கடந்த 2015 பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது " தன்னை அதிர்ஷ்டசாலி என்று மக்கள் கூறுகிறார்கள்,  இந்த அதிர்ஷ்டசாலியால் மக்கள் பயனடைந்துள்ளனர்" என மோடி கூறியிருந்தார். 

அவரது பேசியதன் அடிப்படையில் நான் சொல்கிறேன், பொது மக்கள் மீது சுமை அதிகரித்து வருவதால், இனி நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போவதில்லை மோடி என்று அவரிடம் சொல்ல விரும்புகிறேன். பொதுமக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். அரசாங்கத்தின் அதிஷ்டம் அதிகரிக்கிறது, ஆனால் மக்களுக்கு அல்ல. ஏன் இப்படி நடக்கிறது என்று  நீங்கள் பதில் அளிக்கிறீர்களா மோடி.? என பிரதமருக்கு கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசாங்கத்தால் நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயகத்தின் நான்கு முக்கியமான சக்கரங்கள் சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்,  நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் சரியான புரிதல் இல்லை, எனவேதான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது, அரசாங்கத்திற்கு வருவாய் ஏற்பட எந்த வழியும் இல்லை, எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி அதன் மூலம் வருமானம் தேடுகின்றனர், தற்போதுள்ள சூழ்நிலையில் வேறுபாடுகளை கலைந்து எதிர்க்கட்சியினர் அனைவரும் அரசுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என கபில்சிபல் அழைப்பு விடுத்துள்ளார்.