இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக ஜி.எஸ்.டி. வரி உதவி ஆணையர் பா. பாலமுருகன் பரபரப்பாக குற்றச்சாட்டு கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இவர் இந்தியை அலுவல் மொழியாக பரப்புகிற பிரிவில் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்தி மொழி தெரியாது. ஆனால், இந்தி மொழி பரப்புகிற பணி இவர் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.


இந்தியை தாய் மொழியாக கொண்டவர்களை இப்பணிக்கு நியமிக்காமல் தமிழை தாய் மொழியாகக் கொண்ட, இந்தி மொழி தெரியாத இவரை இந்தி மொழி பரப்புகிற பணியில் அமர்த்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய போக்குகள் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல் இந்தி பேசாத மக்கள் மீது, இந்தியை திணிக்கிற கடுமையான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்து குரல் எழுப்பிய உதவி ஆணையர் பா. பாலமுருகன் பாராட்டுக்குரியவர். அவரது உரிமைக் குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில், கடும் விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழியை, இந்தி பேசாத அலுவலகப் பணியாளர்கள் மீது திணிப்பதை மத்திய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தமிழகம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசின் அலுவலர்களில் மூன்றில் இரண்டு பேர் இந்தி மொழி அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று உதவி ஆணையர் பாலமுருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் உண்மையில்லை என்று எவரும் கூற முடியாது. இத்தகைய நிலை நீடிப்பதை எவரும் அனுமதிக்க முடியாது.


எனவே, இந்தி பேசாத தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தி மொழி அறிந்த வேற்று மாநிலத்தவரை அலுவலராக நியமிப்பதை தவிர்த்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படும்போதுதான் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு மனநிறைவு ஏற்படுகிற வகையில் மத்திய அரசின் அலுவலகங்கள் செயல்பட முடியும். தமிழகத்தில் அலுவலரை நியமிக்கும் போது தமிழ் மொழி தெரியாத, இந்தி மொழி மட்டும் தெரிந்தவரை அலுவலராக நியமிப்பதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லை எனில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.”என்று கே.எஸ். அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.