காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கொரோனா தொற்றால் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். அவரது மனைவியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதல் ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 107 நாள்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது லட்சத்தை எட்டுவதற்கு வெறும் 15 நாள்களே தேவைப்பட்டது. மூன்றாவது ஒரு லட்சம் பேர் பாதிப்பு 10 நாள்களில் நடைபெற்றது.

நான்காவது லட்சம் பேர் பாதிப்பதற்கு 8 நாள்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஐந்தாவது லட்சம் பேர் பாதிப்பதற்கு வெறும் 6 நாள்களே தேவைப்பட்டன. நேற்று ஒரு நாளில் மகாராஷ்டிராவில் 5,000-க்கும் அதிகமானோரும், தமிழ்நாட்டில் 3,700-க்கும் அதிகமானோரும், டெல்லியில் 3,460 பேரும் கொரோனாவால் பாதிகப்பட்டனர். இதுவரையில் மொத்தமாக 16,095 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 410 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்விக்கு காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்துள்ளது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் அபிஷேக் சிங்விக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவரது மனைவிக்கு நடத்தப்பட்ட சோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து இருவரும்  தங்களது வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அபிஷேக் சிங்வியை தொடர்ந்து அவரது மகன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளனர். அவர்களில் சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக கொரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் சஞ்சய் ஜாவுக்கு உறுதியானது. அவருக்குப் பிறகு 2வது காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி என்பது குறிப்பிடத்தக்கது.