தமிழகத்தின் எதார்த்த நிலைக்கு ஏற்ப திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வோம் என்று தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியிருந்தாலும் 100 தொகுதிகளில் திமுகவிற்கு காங்கிரஸ் உதவியாக இருக்கும் என்று கூறியதில் தான்ட்விஸ்ட் இருக்கிறது என்கிறார்கள்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த போதே கலைஞர் டிவியில் வருமான வரித்துறை, சி.பி.ஐ ரெய்டு நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் காங்கிரசின் நெருக்கடிக்கு பணிந்து அந்த கட்சிக்கு 63 தொகுதிகளை வாரிக் கொடுத்தார் கலைஞர். இதன் பிறகு 2016 சட்டமன்ற தேர்தலிலும் கடைசி வரை வரும் என எதிர்பார்த்த தேமுதிக கூட்டணிக்கு வரவில்லை.

இதனால் காங்கிரசை கூட்டணியில் சேர்த்து 41 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தார் கலைஞர். ஆனால் இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்தனர். சொல்லப்போனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக – அதிமுக நேரடி போட்டி ஏற்பட்ட தொகுதிகளில் திமுகவே அதிக தொகுதிகளை வென்றது. ஆனால் காங்கிரசின் 41 தொகுதிகளில் சுமார் 33 தொகுதிகளை வென்றதால் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இந்த நிலையில் அண்மையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

சுமார் 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியால் வெறும் 19 இடங்களில் தான் வெல்ல முடிந்தது. அதே சமயம் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக பீகாரில் உருவெடுத்தது. காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 70 தொகுதிகளை குறைத்து அதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிருந்தால் பீகாரில் மீண்டும் நிதிஷ் குமார் முதலமைச்சராகி இருக்க முடியாது. எனவே காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுப்பது என்பது ஆட்சிக் கனவில் இருக்கும் பிராந்தியக் கட்சிகள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு சமம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 20 தொகுதிகள் கூட கொடுக்க கூடாது என்று அந்த கட்சி நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் காங்கிரசுக்கு இந்த முறை 21 தொகுதிகள் தான் என்று திமுக முடிவெடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் தான் தினேஷ் குண்டுராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. மேம்போக்காக பார்த்தால் எதார்த்த நிலைக்கு ஏற்ப தொகுதிகளை பெறுவோம் என்று அந்த பேட்டியில் கூறப்பட்டிருப்பது போல் தோன்றும், அதாவது கொடுப்பதை கொடுங்கள் என காங்கிரஸ் இறங்கி வந்திருப்பது போல் தெரியும்.

ஆனால் உண்மையில் அறிக்கையின் ஊடே பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு என்று ஒரு ட்விட்ஸ் வைத்திருப்பார் குண்டுராவ். அதோடு மட்டும் அல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழகத்தில் 9 தொகுதிகளை வென்றதையும் குண்டுராவ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் 100 தொகுதிகளில் திமுகவிற்கு காங்கிரஸ் உதவியாக இருக்கும் என்று குண்டுராவ் சொல்லியிருப்பது 100 தொகுதிகளின் எங்களின் சேவை உங்களுக்கு தேவை என்று எமோசனல் மிரட்டல் போல் தெரிகிறது.

எனவே காங்கிரஸ் 20 தொகுதிகளுக்கு எல்லாம் ஒப்புக் கொள்ளாது என்றும் கடந்த முறைகளை போலவே திமுகவை நெருக்கடிக்கு தள்ள வியூகம் வகுக்கும் என்கிறார்கள்.