இந்த நிமிடம் வரை திமுகவுடன் தான் கூட்டணி, ஆனால் வருங்காலத்தையும் யோசிக்க வேண்டும் என்பதால் மநீம கூட்டணி குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கருத்து கேட்பு கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் 41 தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர் பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவுடன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நிறைவு செய்துள்ளார். தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதை போல 41  இடங்களை வழங்க வேண்டும் எனவும்,  அல்லது குறைந்தது 30 தொகுதிகளையாவது தர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக 20 முதல் 23 இடங்களை ஒதுக்க முன் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. 

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாநில பிரிவு தலைவர்களை தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்பு நடத்தியுள்ளார். அப்போது நிர்வாகிகளிடம் கூட்டணியில் எத்தனை இடங்களை கொடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம், அல்லது தனித்து போட்டியிடலாமா என்று கேள்விகளை கேட்டதாகவும், அப்போது ஒரு சில மாவட்ட தலைவர்கள் திமுகவிடம்  குறைந்தது 30 தொகுதிகளையாவது பெற வேண்டும் எனவும், காங்கிரஸ் கட்சியின் தனித்துவத்தை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க கூடாது எனவும், தமிழகத்தில் ராகுல் காந்தியின் சுற்றுப் பயணத்திற்கு பின்னர் எழுச்சி ஏற்பட்டுள்ளதால் 41 இடங்கள் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்க வேண்டும் என்றும் பல மாவட்ட தலைவர்கள் தினேஷ் குண்டுராவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

ஒருவேளை கேட்ட இடங்களை திமுக ஒதுக்காவிட்டால் தனித்தோ அல்லது மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், அல்லது மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கலாம் என்றும், நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் முடிவு எட்டப்படும் என அவர் கூறியுள்ளார். 

முன்னதாக  சென்னை விமான நிலையத்தில் கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான விரப்ப மொய்லி செய்தியாளரிகளிடம் பேசிகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியில் நான் உள்பட 3 பேர் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளோம். தேர்தல் பணிகள் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வோம். தமிழக காங்கிரசில் தேர்தல் பணிகள் ஆய்வு செய்யப்படும். தொகுதி பங்கீட்டு குறித்து தலைவர்களுடன் கலந்து பேசுவேன். திமுக தலைவரை சந்திக்க வேண்டியதாக இருந்தால் சந்தித்து பேசுவேன். தொகுதி பங்கீட்டு குறித்து தலையிட முடியாது. ஆனால் காங்கிரஸ் தலைமை தெரிவித்தால் பங்கீடு குறித்து பேசுவேன் என கூறியுள்ளார்.