தைப் பொங்கலன்று தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மோதலின் பிரதான அத்தியாத்தில் தனது துடுக்குத் தனமான பேச்சினால் தீ வைத்திருக்கிறார் துரைமுருகன். இவரது பேச்சினை ஸ்டாலின் வார்த்தைகளாகவே காங்கிரஸின் டெல்லி மேலிடம் சந்தேகிக்க துவங்கியிருப்பதுதான் இந்த விவகாரத்தின் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட்டே! உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு  போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை, ஒதுக்கிய இடங்களிலும் தி.மு.க.வின் அதிருப்தியாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு குடைச்சல் கொடுத்தனர், ஊரக தலைவர் பதவிகளையும் மிக மிக குறைவான அளவே வழங்கி தங்களை அசிங்கப்படுத்தினர் என்று தி.மு.க. தலைமையின் மீது தமிழக காங்கிரஸின் தலைமைக்கு மிக கடுமையான கோபம். அதிலும் சட்டமன்ற காங்கிரஸ் குழுவின் தலைவர் ராமசாமி, தனது மகனுக்கு மாவட்ட கவுன்சிலர் பதவி எதிர்பார்த்து ஏமாந்தார். 
விளைவு! அவரும், தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரியும் இணைந்து தி.மு.க.வை வெளிப்படையாக உரசி ஒரு அதிருப்தி அறிக்கை வெளியிட்டனர். 

அதில் ‘கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக தி.மு.க. செயல்பட்டது’ எனும் வரியானது ஸ்டாலினை கடும் டென்ஷாக்கியுள்ளது.
இதனால் தமிழக காங்கிரஸை தனது கூட்டணியிலிருந்து  வெளியேற்றிட முழு மூச்சுடன் செயல்பட துவங்கியுள்ளது தி.மு.க. தலைமை. கே.எஸ். அழகிரி நேரில் ஸ்டாலினை சொல்லி தன் அறிக்கைக்கு வருத்தம் தெரிவித்து, பொங்கல் வாழ்த்து சொன்னார். அழகிரியை கண்டிப்பதாக சோனியா வட்டாரமும் தி.மு.க. தலைமைக்கு  உறுதியான தகவல் சொல்லியது. ஆனாலும் ஸ்டாலினின் சூடு அடங்கவில்லை. விளைவு, ‘அப்படியானால் கே.எஸ். அழகிரியின் பதவியை காவு கேட்கிறாரா ஸ்டாலின்?’ என்று கொதிக்கின்றனர் காங்கிரஸார். திருநாவுக்கரசரின் பதவி பறிக்கப்பட்டுதான் அந்த இடத்தில் கே.எஸ்.ஏ. வைக்கப்பட்டார்.  இதில் அரசருக்கு கடும் கடுப்பு. ஆனாலும் இப்போது அந்த கடுப்பையும் மறந்துவிட்டு காங்கிரஸின் சுயமரியாதைக்காக தி.மு.க.வுக்கு எதிராக கொதிக்கிறார் அரசர். ’நம்மை ரொம்பவே  அலட்சியம் செய்தும், சீண்டியும், அவமதிக்கவும் செய்கின்றனர்.’ என்று அரசர் வெளிப்படையாக சத்தியமூர்த்தி பவனில் வெடித்தது ஸ்டாலினின் காதுகளை எட்டியது. 

உடனே ‘திருச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க. தோள் கொடுக்கலேன்னா இன்னைக்கு அரசர் எம்.பி.யாகியிருக்க முடியுமா? நாம அவங்களை அலட்சியம் பண்றோமுன்னு பொங்குறார், சரி இனி அதையே பண்ணிடுவோம்!’ என்று துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் பொன்முடி ஆகியோரிடம் பொங்கலுக்கு முந்தைய நாள் கொதித்திருக்கிறார் ஸ்டாலின். 
அடுத்த நாள் பொங்கலன்று துரைமுருகனோ வெச்சு செய்துவிட்டார் காங்கிரஸை மிக வெளிப்படையாக. வேலூரில் பொங்கல் விழாவின் போது மீடியாவிடம் “எங்கள் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலைப்பட போவதில்லை. அவர்களுக்கு ஓட்டே கிடையாது. அவர்கள் போவதினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை. வெளியே போக சொல்வதுமில்லை. அவர்களே போனாலும் ஒப்பாரி வைப்பதுமில்லை.” என்று வெளுத்தெடுத்து பேசிவிட்டார் மனிதர். 


துரையின் இந்த துடுக்குத் தனமான பேச்சானது காங்கிரஸ் மேலிடத்தை ரொம்பவே அதிருப்தியும், ஆத்திரமும் கொள்ள வைத்துவிட்டது. ” எங்கள்  மாநில தலைவர் என்றும் பாராமல் அழகிரியை அவ்வளவு விட்டுக் கொடுத்து பேசி, ஸ்டாலினின் கோபத்துக்கு ஆறுதல் கூறி, சமாதானம் செய்தோம். ஆனாலும் இன்னமும் விடாமல் இழுத்துக் கொண்டே போகிறார்கள் பிரச்னையை. அப்படியானால் பிளவைத்தான் தி.மு.க. விரும்புகிறதா?  ஸ்டாலினின் விருப்பம், சம்மதம் இல்லாமல் தன்னிச்சையாக இவ்வளவு ஆணவமாக பேசப்போவதில்லை துரைமுருகன். அப்படியானால் ஸ்டாலின் சொல்லித்தான் அவர் இப்படி பேசியுள்ளாரா? துரையின் வார்த்தைகளெல்லாம் ஸ்டாலினின் வார்த்தைகள்தானா?
ஸ்டாலினின் உண்மையான எண்ணம் என்ன என்பதை ஸ்மெல் பண்ணி சொல்லுங்கள்!’ என்று தங்கள் லிங்க்-கில் உள்ள டெல்லி ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் சோனியா, ராகுல் தரப்பு கேட்டிருக்கிறது.அவர்களும் தங்களுக்கு கீழ் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் வழியே தகவலை திரட்டினர். 

அதன் படி சில மணி நேரங்களில் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ‘இன்ஸ்டன்ட்’ தகவல் என்னவென்றால் ....”பா.ஜ.க. ஆதரவு நிலையை நோக்கி தி.மு.க. பயணப்படும் எண்ணத்தில் உள்ளது! அதாவது பா.ஜ.க.வின் கூட்டணியில் சேருமா, சேராதா! என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் உங்களை (காங்கிரஸை) கழட்டிவிடுவது எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இது கூட பா.ஜ.க.வின் உத்தரவுதான். தி.மு.க.வுக்கு எதிராக சில ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு ஆவணங்களை துல்லியமான ஆதாரங்களுடன் எடுத்து வைத்துள்ளது மத்திய அரசு. அதை வைத்து அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலரை இந்த நொடியே கைது பண்ணி பல மாதங்கள் மிக எளிதாக சிறையில் வைக்கலாம். இதன் மூலம் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு நிதி போக்குவரத்து அடிப்படையிலும், நிர்வாக போக்குவரத்து அடிப்படையிலும் கடும் இடைஞ்சல்களை தர முடியும். 
சிம்பிளாக சொல்வதென்றால் தி.மு.க.வின் கஜானாவை நிரப்பும் நபர்களை முடக்கிவிடுவதற்கான முழு சூட்சமங்களும் பா.ஜ.க.வின் கையில் உள்ளது. 


‘இதை நாங்கள் செய்யட்டுமா?’ என்று கேட்டுத்தான் தி.மு.க. தலைமையை திணற வைத்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து, போராட்டங்களை வலுப்படுத்துவதில் அமித்ஷா குறுக்கிடவேயில்லை. சொல்லப்போனால் அதனால் அவர்களுக்கு தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் எந்த கவலையுமில்லை. தி.மு.க. தனது ஓட்டு வங்கியை ஸ்டெடியாக்க நினைத்தால் செய்யட்டும்! ஆனால் தங்கள் ரூட் சிலவற்றை ஸ்டாலின் க்ளியர் செய்து கொடுக்க வேண்டும். அதன் முதல் நிலையாக காங்கிரஸை கூட்டணியிலிருந்து கழட்டிவிட வேண்டும். தேசிய அளவில் மட்டுமில்லாமல் மாநில அளவிலும் காங்கிரஸை ஒழித்து கட்டும் தங்கள் முயற்சிக்கு அவர் உதவ வேண்டும். இதை செய்தாலே போதும் தி.மு.க. தலைவர்கள் மீது கை வைக்க மாட்டோம். கூட்டணியோ இல்லையா என்பதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போதைக்கு தங்களுக்கு ஆதரவு நிலைப்பாடு மட்டும் தி.மு.க. எடுக்கணும்! என்று பிரஷர் கொடுத்துள்ளனர். அதன் வெளிப்பாடே தி.மு.க. உங்களை வெளியே தள்ளும் முயற்சி. பா.ஜ.க.வுக்காக உங்களை காவு கொடுக்க முடிவு செய்துவிட்டார் ஸ்டாலின். ” என்பதே அது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் திரட்டிக் கொடுத்திருக்கும் தகவல்கள் சோனியா, ராகுலை அதிர வைத்துள்ளன. தி.மு.க.வை பிரிந்து தமிழகத்தில் காங்கிரஸால் அரசியலில் எதையும் சாதிக்கும் சூழல் இப்போது இல்லை! எனவே இந்த நிலையை எப்படி கையாள்வது என புரியாமல் திணறுகின்றனர் என்பதே யதார்த்தம்.