திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. தொகுதியைப் பிடிக்க காங்கிரஸில் உள்ள தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவிவருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. இதில் புதுச்சேரி தொகுதியைத் தவிர்த்து தமிழகத்தில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பதை காங்கிரஸ் கட்சி பட்டியலாகத் தயாரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தற்போது பதவியில் உள்ள துணைத் தலைவர், செயல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியிடக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. 9 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தலைவர்களுக்குள் கடும் போட்டி நிலவிவருகிறது. தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி கேட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு, திருச்சி, திருப்பூர், விருது நகர், நாகர்கோவில், சிவகங்கை ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. இந்தத் தொகுதிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், தென்காசி, மயிலாடுதுறை, ராமநாதபுரம் போன்ற தொகுதிகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தென் சென்னை தொகுதி குஷ்புக்காக கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திருவள்ளூர் தொகுதி செல்வப்பெருந்தகைக்கும் சேலம் தங்கபாலுவுக்கும் ஈரோடு அல்லது திருப்பூர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் திருச்சி திருநாவுக்கரசருக்கும் விருது நகர் மாணிக் தாகூருக்கும் சிவகங்கை கார்த்தி சிதம்பரத்துக்கும் கேட்கப்பட்டும் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
 நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட காங்கிரஸில் பலத்த போட்டி நிலவிவருகிறது. அந்தத் தொகுதியைக் கைப்பற்ற குமரிவாழ் காங்கிரஸார்கள் கோஸ்டி தலைவர்களைப் பிடித்து வாய்ப்பு கேட்டுவருகிறார்கள். இதற்கிடையே காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து இன்றோ அல்லது நாளையோ முடிவு எடுக்கப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.