தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி பவனில் தலைவர்கள் முன்னிலையில் தொண்டர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக சஞ்ஜய் தத் அவர்களை நியமித்ததை தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இதில் சஞ்சய் தத் கலந்துகொண்டு மாவட்ட தலைவர்கள், மூத்த நிர்வாகிகளுடனும் கட்சியின் வளர்ச்சி மற்றும் குறைகளை கேட்டறிந்து வந்தார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பினரை வெளியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாத‌ம் ஏற்பட்டுள்ளது.

 

சிறிது நேரத்தில் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. புதிய மேலிடப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற மோதலால் காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக அடங்கி கிடந்த காங்கிரஸ் கோஷ்டி பூசல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

முன்பு தங்கபாலு-ஈவிகேஎஸ், சிதம்பரம்-ஈவிகேஎஸ், ஜி.கே.வாசன்-ஈவிகேஎஸ் என பல கோஷ்டிகள் இருக்கும். அப்போதேல்லாம் கோஷ்டி மோதல் என்றாலே அடிதடி சட்ட கிழிப்பு மற்றும் வேட்டி உருவலுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஈவிகேஸ்-திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் வேட்டி கிழியுமோ என்று பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.