இந்தியை எல்லோரும் தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என்று உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு இந்தி தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்‌ஷா, “பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடிப்படை. என்றாலும், ஒரே மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது கலாசார ரீதியாக இந்தியாவை ஒன்றிணைக்கும். இந்தியை இந்தியாவின் தேசியமொழியாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற மொழிகளை அழித்து இந்தியை வளர்க்க இதைக் கூறவில்லை” என்று தெரிவித்தார்.
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா இதுகுறித்து கூறுகையில்,“சுதந்திரத்துக்கு பிறகு அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களால் இயற்றப்பட்ட உணர்வுப்பூர்வமான, விஷயத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை யாரும் தெரிவிக்கக் கூடாது. நேரு காலத்தில் மொழி பிரச்சினை எழுந்தபோது மும்மொழி கொள்கையை மத்திய அரசு கடைபிடிக்கத் தொடங்கியது. அதை எப்போதும் மாற்றக் கூடாது. அப்படியான சிந்தனையே வரக்கூடாது. அது நாட்டை அமைதியின்மையில் தள்ளிவிடும்.
இந்தியாவில் பெரும்பாலோனர் இந்தி பேசுபவர்கள்தான். அதேவேளையில் உலகை இணைக்கும் ஆங்கிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ், கன்னடம், தெலுங்கு, வங்காளம், ஒடியா, குஜராத்தி, மராத்தி போன்றவைகளும் இந்திய மொழிகள்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பிறமொழிகளையும் நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும்” என்று ஆனந்த் சர்மா கூறினார்.