நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணி மீண்டும் போட்டியிடுகிறார். 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 21 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது. குளச்சல், விளவங்கோடு, வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இந்தத் தொகுதியில் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 
இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் வெளியிட்டார். இதன்படி வேளச்சேரியில் ஹசன் மவுலானா, மயிலாடுதுறையில் ராஜ்குமார், குளச்சலில் பிரின்ஸ், விளவங்கோட்டில் விஜயதாரணி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். விளவங்கோட்டில் விஜயதாரணிக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது என காங்கிரஸில் சிலர் போராட்டம் நடத்திய நிலையில், அந்தத் தொகுதி விஜயதாரணிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.